<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Thursday, April 21, 2005

8:23 AM - பாசுரம் பதினொன்று



पापे क्रुते यदि भवन्ति भयानुताप लज्जाः पुनः करणमस्य कथं घटेत।
मोहेन मे न भवतीह भयादिलेशः तस्मात्पुनः पुनरघं यतिराज! कुर्वे॥ ११
பாபே க்ருதே யதி34வந்தி ப4யாநுதாப லஜ்ஜா: புந: கரணமஸ்ய கத2ம் க4டேத
மோஹேந மே ந ப4வதீஹ ப4யாதி3லேS: தஸ்மாத்புந: புநரக4ம் யதிராஜ! குர்வே


பொருள்:

யதிராஜா! எவனொருவன் தான் செய்யும் பாபங்களை எண்ணித் துக்கமும், பயமும், பச்சாதாபமும் கொள்கிறானோ, அவன் அதே பாபங்களை மீண்டும் மீண்டும் எங்கனம் செய்வான்? அனால் நானோ, நான் செய்யும் பாபங்களைப் பற்றி சிறிதளவேணும் வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாதவனாயிருக்கிறேன். ஆகையினாலேயே நான் மீண்டும் மீண்டும் அப்பாபங்களைச் செய்துகொண்டே இருக்கிறேன்.

விளக்கவுரை:

நாம் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடுவது என்பது இவ்வுலகில் இயலாத காரியம். இருந்தாலும், எவனொருவன் தான் செய்யும் செய்த பாபங்களை எண்ணி பயமும், வெட்கமும், வெறுப்பும் கொள்கிறானோ அவனுக்கு பிராயச்சித்தம் உண்டு என்பது மோலோர் வாக்கு. இந்நிலைக்கு வந்தபின் குறந்த பட்சம் அவன் தெரிந்தே அந்த பாபங்களைச் செய்யமாட்டான். ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த நிலையையே இங்கே குறிப்பிடுகிறார். தான் தன்னுடைய பாபங்களை எண்ணி வெட்கப்படுவதில்லை என்று குறைபடுகிறார். இந்நிலையிலிருந்து தம்மை மாற்ற எம்பெருமானாரின் கருணையை வேண்டுகிறார்.

தம் பாபங்களை எண்ணி வெட்கப்படவேண்டிய நிலையை பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி தம்முடைய ஸ்ரீவசனபூஷணத்தின் வியாக்கியானத்திலே ஒரு சிறு சம்பவத்தின் மூலம் விவரிக்கிறார். ஸ்வாமி கூரத்தாழ்வானுக்கு சேரப்பிள்ளை பிள்ளையாழ்வான் என்றொரு சிஷ்யன் இருந்தார். அவர் மிகுந்த அகந்தையும், செருக்கும், இறுமாப்பும் உடையவராய் பல பாகவத அபசாரங்களைச் செய்துவந்தார். ஸ்வாமி கூரத்தாழ்வான் அவரை ரக்ஷிக்க திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் அந்த சிஷ்யனிடம் கூரத்தாழ்வான் தமக்கு ஒரு தானம் அள்ளிக்குமாறு விண்ணப்பித்தார். பிள்ளையாழ்வான் மிக்க ஆனந்தத்துடனும், கிளர்ச்சியுடனும் தம்முடைய ஆசார்யன் திருவுள்ளத்தை நிறைவேற்ற ஒப்புவித்தார். மனத்தாலும், வாக்காலும், உடலாலும் ஒருபோதும் பாகவத அபசாரம் செய்யமாட்டேன் என்ற சத்தியத்தையே கூரத்தாழ்வான் தன் சிஷ்யனிடம் ஒரு உதக தானமாக பெற்றுக்கொண்டார். பிள்ளையாழ்வானும் அங்கனமே நடந்துவந்தார். ஒருசமயம், அவர் தன்னுடைய புத்திக்குறைவால் பாகவத அபசாரத்தை செய்ய நேர்ந்தது. தாம் செய்த பாபத்தை உணர்ந்த பிள்ளையாழ்வான், மிகுந்த வெட்கத்துடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குச் செல்லாமலேயே இருந்தார். சிஷ்யனைக்காணாத கூரத்தாழ்வான், பிள்ளையாழ்வான் இல்லத்திற்குச்சென்று நடந்ததை அறிந்தார். தன் திருவடிகளில் விழுந்த பிள்ளையாழ்வானைக் கைக்கொண்டு கூரத்தாழ்வான் பின்வறுமாறு உப்தேசித்தார்: “நீர் உம்முடைய பாகவதர்களுக்கு மானசீகமாகச் செய்த அபசாரத்தைப் பற்றி மனத்தால் வெட்கமும், வேதனையும் உடையவராயிருந்தால் சர்வேஸ்வரன் அதை மன்னிப்பான். நீர் உடலால் செய்யும் குற்றங்களுக்கு அரசன் தகுந்த தண்டனையளிப்பான். ஆகையால் உம்முடைய சத்தியத்திலே உறுதியாக இரும்”.

ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்



Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates