<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Friday, April 15, 2005

1:29 PM - பாசுரம் மூன்று

श्रीरङ्गराजचरणम्बुज राजहंसं श्रीमत्पराङ्कुश पदाम्बुजभ्रुङ्गराजं।
श्रिभट्टनाथ परकाल मुख़ाब्जमित्रं श्रीवत्सचिह्न शरणं यतिराजमीडे॥


ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம்
ஸ்ரீமத்பராங்குS பதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் |
ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம் யதிராஜமீடே3 ||


பொருள்:

அழகிய தாமரை மலரை அன்னப்பறவை எவ்வாறு தனது இருக்கையாக கொண்டுள்ளதோ, அது போன்று ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளையே தன்னுடைய நிரந்தரமான இருப்பிடமாகக் கொண்டுள்ள ஸ்வாமி இராமானுசரைத் தொழுகிறேன். மகரந்ததுகள்களால் சூல் கொண்டு தேன் நிரம்பியுள்ள நறுமணம் வீசும் தாமரை மலரின்மேல் அத்தேனைக் குடிக்கும் வண்டு எவ்வாறு அமர்ந்திருக்கிறதோ அது போன்று நம்மாழ்வாரின் திருப்பாத கமலத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன். திருக்கமலமுகத்தை உடைய பெரியாழ்வாருக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ஸ்வாமி இராமானுசர் சூரியனைப் போன்று விளங்குகிறார். அவர்களது திருமுகம் ஸ்வாமியை கண்ட மாத்திரத்திலே மலர்கின்றது. அந்த யதிராசனை நமஸ்கரிக்கின்றேன். கூரத்தாழ்வானைத் தன் திருவடிகளிலேயே கொண்டுள்ள எம்பெருமானாரைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.


விளக்கவுரை :

எம்பெருமானாரைப் பற்றிய நான்கு கருத்துகளை ஸ்வாமி மணவாள மாமுனிகள் இப்பாசுரத்திலே அருளிச்செய்கிறார்.

1. ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம் : பங்குனி உத்திர நன்நாளிலே திருவரங்கத்திலே அரங்கநாதன் தன்னுடைய அர்ச்சை ரூபத்திலிருந்து எழுந்து ஸ்வாமி இராமானுசருடன் உரையாடினான். ஸ்வாமி இராமானுசரை அவருடைய அந்திமக்காலம் வரை தன்னுடனேயே இருக்கும்படி விண்ணப்பித்தான் (“யவாத் ஸரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ”). மிகுந்த பாசத்துடன் அரங்கநாதன் ஸ்வாமி இராமானுசருடைய ப்ரபத்தியை ஏற்றுக்கொண்டான். தன்னுடைய திருவடித் தாமரையிலேயே ஸ்வாமி இராமானுசர் இருக்கவேணும் என்ற கருத்தையே எம்பெருமான் “அத்ரைவ” என்ற பதத்தின் மூலம் சுட்டிக்காட்டுகிறான். ராஜஹம்ஸத்தைப் போல ஸ்வாமி இராமானுசரும் அரங்கநாதனின் திருவடித் தாமரையிலேயே தன்னுடைய அந்திமக்காலம் வரை எழுந்தருளியிருந்தார்.

ராஜ ஹம்ஸத்துடன் ஸ்வாமி இராமானுசரை ஒப்பிடுதல் : அன்னப்பறவையான ராஜஹம்ஸம் எவ்வாறு பாலைத் தண்ணீரில் இருந்து பிரிக்க வல்லதோ, அதுபோன்று ஸ்வாமி இராமானுசர் ஸாஸ்திரங்களில் இருந்து அதன் ஸாரத்தைப் பிரிக்க வல்லவர் என்பதையே இந்த ஒப்பிடுதல் காட்டுகின்றது. மேலும் இது ஸ்வாமியுடைய பரமஹம்ஸ பரிவ்ராஜக ஆசார்யத்வத்தையும் காட்டுகிறது. எப்படி சேறு நிரம்பிய நெல் வயல்களிலே நீந்தும் அன்னத்தின் பாதங்கள் அந்த சேற்றிலே அமிழ்வதில்லையோ அது போன்று ஸ்வாமி இராமானுசரும் களங்கம் நிறைந்த இந்த சம்சார உலகத்திலே இருந்தாலும், சம்சார வாசனையினால் களங்கப்படுவதில்லை. இந்த ஒப்பிடுதலுக்கு ஈடாக ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி, நம்மாழ்வாரின் திருவிருத்த பிரபந்தத்தின் பலஸ்ருதியை குறிப்பிடுகிறார். திருவிருத்தத்தின் நூறு பாசுரங்களின் ஆழ்ந்த பொருளையும் அறிந்தவர்கள் சம்சாரம் என்னும் சேற்றிலே ஆழங்கால் படமாட்டார்கள் என்பது பலஸ்ருதி. இதற்க்கு வியாக்கியானம் அளிக்க ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி “ந பதநாதி ரதிம் ஹம்ஸ: கதாசித் கர்தமாம்பஸி” என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார்.

ஸ்வாமி இராமானுசர் தாயார் ரங்கநாயகியைப் போலவே புருஷகார க்ருத்யத்திலே ஈடுபடுபவர். எவ்வாறு தாயார் அரங்கநாதனிடம் ஜீவாத்மாக்களின் அபராதங்களைப் பொறுத்துக் கொண்டு ப்ரபந்நர்களுக்கு மோக்ஷத்தை அளிக்க வேண்டுகிறாளோ, அது போன்று ஸ்வாமி இராமானுசரும் வேண்டுகிறார். அன்னத்தின் நடையும் நடத்தையும் தாயாரை ஒத்தனவாக இருக்கின்றன. அது போன்றே எம்பெருமானாரும் விளங்குகிறார் என்பதே மாமுனிகளின் எண்ணம். ஸ்வாமி வேதாந்த தேசிகனும் தம்முடைய யதிராஜ ஸப்ததியின் 22வது பாசுரத்திலே எம்பெருமானாரை ராஜ ஹம்ஸத்துடன் ஒப்பிடுகிறார். இங்கு அரங்கநாதனின் பக்தர்களின் மனத்திலே அமர்ந்திருக்கும் ராஜஹம்ஸம் என்று ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார்.

2. ஸ்ரீமத்பராங்குS பாதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் : முதல் பாசுரத்திலே மாமுனிகள் ஸ்வாமி இராமானுசரை “பராங்குச பாத பக்தம்” என்று காட்டுகின்றார். இரண்டாவது பாசுரத்திலே “ஸ்ரீமத்பராங்குS பாதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம்´என்று கொண்டாடுகின்றார். முதல் பாசுரத்திலே அருளியது “ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்” என்ற அம்சமாகும். இரண்டாம் பாசுரத்திலே அருளியது “குண ப்ரயுக்த தாஸ்யம்” என்ற அம்சமாகும். தேனுருஞ்சும் வண்டு எங்கனம் மலர்களிலே உள்ள தேனை அறிந்துகொண்டு அம்மலர்களை சுற்றுகின்றதோ, அங்கனம் ஸ்வாமி இராமானுசரும் திருவாய்மொழி என்னும் அருளிச்செயலில் பொதிந்துள்ள அமுதினும் இனிய பகவத் விஷயத்தை அனுபவிக்கவேண்டி நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளையே நாடுகின்றார். “தொண்டர்க்கு அமுதுன்ன சொல் மாலைகள் சொன்னேன்” என்று நம்மாழ்வாரே ஸாதித்துள்ளார். தேனுன்னும் வண்டைப்போலவே இராமானுசன் என்னும் வண்டும் நம்மாழ்வாரின் ஒரு பாசுரத்தில் இருந்து மற்றொரு பாசுரத்திற்குத் செல்லுகிறது என்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸாதிக்கிறார்.

3. ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம் : பெரியாழ்வார் பட்டநாதன் என்று வழங்கப்படுபவர். திருமங்கையாழ்வார் பரகால நாதன் என்று வழங்கப்படுபவர். “ஆப்ஜம்” என்பது தாமரை மலரைக் குறிக்கும். “முகாப்ஜம்” என்பது தாமரை போன்ற முகம் என்பதைக் குறிக்கும். அத்தாமரை போன்ற முகத்தினை மலரவைக்கும் சூரியனாக ஸ்வாமி இராமானுசர் ஒப்பிடப்படுகிறார். பெரியாழ்வாரைப் போல எம்பெருமானுக்குத் துளசி கைங்கர்யத்திலே ஈடுபட்டிருந்ததாலும், திருமங்கையாழ்வாரைப்போல பிராகாரங்களையும், கோபுரங்களையும் அமைத்ததாலும், இவ்வாழ்வார்களின் திருமுகத்தை ஸ்வாமி மலரச் செய்தார் என்பது ஒரு நிர்வாகம். ஆழ்வார்களின் பாசுரங்களின் கருத்தை உணர்ந்து அவர்கள் கூறியபடி அனுஷ்டானங்களைக் கடைபிடித்ததாலும் இவ்வாழ்வார்களின் திருமுகத்தை ஸ்வாமி மலரச் செய்தார் என்பது மற்றொரு நிர்வாகம்.

4. ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம்: கூரத்தாழ்வான் ஸ்ரீவத்ஸசிஹ்நர் என்று வழங்கப்படுபவர். உடையவருடன் விசேஷமான தொடர்பை உடையவர். எம்பார் போன்ற மற்ற சிஷ்யர்களும் ஸ்வாமியின் அன்புக்கு பாத்திரமாயிருந்தாலும், கூரத்தாழ்வானிடமே ஸ்ரீபாஷ்யம் எழுதும் பெரும் பொறுப்பை ஸ்வாமி அளித்தார். பேர் சொல்ல தகுதியில்லா சோழ மன்னனின் சபைக்குச் சென்று இராமானுச தர்சனத்திற்காக தனது தர்சனத்தையே இழந்தவர் கூரத்தாழ்வான். எம்பெருமானாரிடம் கூரத்தாழ்வானின் பக்தி ஈடு இணையற்றது. ஆகையினாலேயே கூரத்தாழ்வான் “பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்று இராமானுச நூற்றந்தாதியிலே திருவரங்கத்து அமுதனாரால் போற்றப்படுகிறார். இந்த கூரத்தாழ்வானைத் தன் திருவடிகளிலே கொண்டுள்ளார் ஸ்வாமி இராமானுசர் என்பது ஒரு நிர்வாகம். ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி இங்கே மற்றொரு விளக்கத்தை ஸாதிக்கிறார். “ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம்” என்பதற்கு மாறாக “ஸ்ரீவத்ஸசிஹ்ந சரணம்” என்று கொண்டால், கூரத்தாழ்வான் ஸ்வாமி இராமானுசருடைய திருவடியாகவே விளங்குகிறார் என்ற பொருள் கொள்ளலாம். திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய திருவடியாகவே கருதப்படுவதுபோலே, கூரத்தாழ்வானும் எம்பெருமானாருடைய திருவடியாகவே அமைகிறார்.

யதிராஜ மீடே : ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த பாசுரத்தை “யதிராஜ மீடே” என்ற வணக்கத்துடன் தலைக்கட்டுகிறார். அரங்கநாதனின் திருவடித்தாமரைகளிலே ராஜஹம்ஸத்தைப்போல அமர்ந்திருப்பவரும், தேனுருஞ்சும் வண்டைப்போல நம்மாழ்வாரின் பாதங்களை நாடுபவரும், பெரியாழ்வார், திருமங்கையாழ்வாடைய தாமரை போன்ற திருமுகத்தை சூரியனாக மலரச்செய்பவருமான ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன்.


ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்




Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates