<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Monday, April 11, 2005

12:01 PM - பாசுரம் ஒன்று


श्रीमाधवाङ्घ्रि जलजद्वय नित्यसेवा प्रेमाविलाशय पराङ्कुश पादभक्तम्।
कामादिदोश हरमात्मपदाश्रितानाम् रामानुजं यतिपतिं प्रणमामि मुर्ध्ना॥


ஸ்ரீமாத4வாங்க்4ரி ஜலஜத்3வய நித்யஸேவா
ப்ரேமாவிலா
Sய பராங்குS பாத34க்தம் |
காமாதி3தோ3
S ஹரமாத்மபதா3SQரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்4நா ||


பொருள் :

நம்மாழ்வாரின் திருவடித்தாமரைகளிலே உயர்ந்த வாத்ஸல்யத்தை உடையவரும், தன் திருவடிகளைத் தஞ்சம் அடைந்தவர்களின் களங்கங்களைப் போக்க வல்லவருமான ஸந்யாஸிகளின் சக்ரவர்த்தியாகிய இராமானுசரை வணங்குகிறேன்.


விளக்கவுரை :

ஸ்வாமி இராமானுசர் தன்னை எப்பொழுதுமே நம்மழ்வாருடைய திருவடித் தாமரைகளில் அடிபணிந்தவராகவே (பராங்குச பாதபக்தம்) எண்ணியவர். இதுவே ஸ்வாமி இராமானுசருடைய வைபவங்களிலேயே மேன்மையானதாகவும், பிரசித்தமானதாகவும் கொண்டாடப்படுகிறது. திருவரங்கத்து அமுதனாரும் தம்முடைய இராமானுச நூற்றந்தாதியிலே “மாறன் அடி பணிந்து உய்ந்தவன்” என்று இக்கருத்தையே அருளியுள்ளார். பட்டர் அருளிச்செய்த “தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்” என்னும் திருவாய்மொழியின் தனியனும் இராமானுசருக்கும் நம்மாழ்வாருக்கும் உள்ள சீரிய தொடர்பையே போற்றுகிறது. எம்பெருமானாருடைய இந்த “பராங்குச பாதபக்தி” என்னும் உயர்ந்த கல்யாண குணத்தை ஸ்வாமி மணவாள மாமுனிகள் யதிராஜ விம்ஸதியின் முதல் பாசுரத்திலே அறுதியிட்டு கூறுகிறார்.

நம்மாழ்வாருக்கு எம்பெருமானின் திருவடித் தாமரைகளின் மேல் உள்ள ஆழ்ந்த பக்தியாகிய காதலே (ஸ்ரீமாதவ ஆங்க்ரி ஜலஜ த்வயம்) திருவாய்மொழிப் பாசுரங்களாக பொழிந்தது. அத்திருவடித் தாமரைகளின் நித்யஸேவையிலேயே நம்மாழ்வார் ஆழ்ந்து கிடந்தார். அத்தகைய காதலால் ஆழ்வாரின் மனது கிளர்ச்சியடைந்தது (பிரேம ஆவில ஆஸய). ஆழ்வார் தம்முடைய பிரேம பரவச கிளர்ச்சியால் எம்பெருமானிடம் பராங்குச நாயகியாக கோபம் பொங்கும் பரிமாற்றங்களிலே ஈடுபட்டுள்ளார். ஆனால் ஆழ்வாரது மனது அமைதியாகவும், ஆனந்தமாகவும் இல்லாமல் ஏன் இவ்வாறு கிளர்ச்சியடைகிறது என்று நமக்குத் தோன்றக்கூடும். இந்த கிளர்ச்சியானது எம்பெருமானை விட்டுப் பிரிந்து இருக்கிறோமே என்ற (விச்லேஷம்) வருத்தத்தாலும், அவனை விட்டுக் கண நேரமும் பிரிந்து இருக்க முடியாது என்ற துடிப்பாலும் உண்டானது என்று பூர்வாசாரியார்கள் விளக்கியுள்ளனர். எனவே ஆழ்வாருடைய கிளர்ச்சி அவருடைய அளவிடமுடியாத பக்தியினாலேயோழிய கர்ம வாசனையினால் அன்று. “ஸ்ரீமாதவ ஆங்க்ரி ஜலஜ த்வய நித்ய ஸேவா, ப்ரேம ஆவில ஆஸய பராங்குஸ” என்ற வாக்கியத்தினாலே ஸ்வாமி மணவாள மாமுனிகள், இராமானுசருக்கும் நம்மாழ்வருக்கும் இடையே உள்ள தொடர்பின் ஆதாரம் நம்மாழ்வாருடைய இந்த ஈடு இணையற்ற, தனிச்சிறப்பு வாய்ந்த அற்புதமான பிரேம பரவச குணமே என்று இந்தப் பாசுரத்தில் ஸாதிக்கிறார்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் எம்பெருமானாரை “பராங்குச பாத பக்தம்” என்று அருளுகிறார். நம்மாழ்வாரின் மற்றைய திருநாமங்களைக் காட்டிலும், பராங்குசன் என்ற திருநாமத்தை பிரயோகப்படுத்தியதற்குப் இரண்டு அற்புதமான விளக்கங்களை பூர்வாசாரியர்கள் அருளியுள்ளனர்.

“எம்பெருமான் சுகுண பிரம்மம் அல்லன்” என்று கூறும் பரர்களின் அங்குசமாக நம்மாழ்வார் விளங்குகிறார். தம்முடைய திவ்ய பிரபந்தங்களின் மூலமாக, உபய விபூதி விசிஷ்டனாகிய எம்பெருமானின் அனந்த கல்யாண குணங்களை கொண்டாடுகின்றார். இவ்வுலகத்தை உடையதால் அவன் லீலா விபூதி விசிஷ்டன், சுத்த சத்வம் நிறைந்த பரம பதத்தை உடையதால் அவன் நித்ய விபூதி விசிஷ்டன் என்று அறுதியிடுகிறார். தம்முடைய அருளிச்செயல்களை ஆழ்வார் “பரனடி மேல் குருகூர் சடகோபன் சொல்” என்று வழங்குகிறார். தம்முடைய திவ்ய ஸூக்த்திகளினால் பரர்களை அங்குசம் போல் அடக்கியதால் பராங்குசன் என்று வழங்கப்படுகின்றார்.

மற்றொரு கருத்திலே நோக்கும்பொழுது, ஆழ்வார் எம்பெருமானாகிய பராத்பரனுக்கே அங்குசமாக விளங்குகிறார். ஆழ்வார் தம்முடைய திருவாய்மொழி (6-4-9) பாசுரத்திலே “வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவையுடை மால்வண்ணனை மலக்கு நாவுடையேற்க்கு” என்று அருளிச்செய்கிறார். எம்பெருமானுடன் தமக்கு உள்ள தொடர்பையும், எம்பெருமானுக்கே தாம் அங்குசமாக விளங்குவதாகவும் பெருமையுடன் ஆழ்வார் அருளிச்செய்கிறார். இத்தகைய பராங்குசராகிய நம்மாழ்வரிடம் ஸ்வாமி இராமானுசர் பெரும் பக்தியை உடையவராயிருந்தார்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் இப்பாசுரத்தின் இரண்டாவது வரியிலே எம்பெருமானாரை பெரும் காருணிகரென்றும், தம்முடைய திருவடிகளிலே தஞ்சம் அடைந்தவர்களுடைய காம, மத, மோஹ, மாத்சர்ய, குரோதம் போன்ற தோஷங்களையெல்லாம் நீக்குபவரென்றும் ஸாதிக்கிறார். எம்பெருமானாரைத் “தோஷ ஹரன்” என்று கொண்டாடுகிறார்.

பிரபந்நஜன தோஷஹரனாகிய ஸ்வாமி இராமானுசருடைய திருவடித் தாமரைகளிலே ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்முடைய சிரம் தாழ்த்தி வணங்குவதாக இப்பாசுரம் நிறைவு பெறுகிறது. தம்முடைய ஸாஷ்டாங்க நமஸ்காரத்தின் மூலம், எம்பெருமானாரிடம் தமக்குள்ள பக்தியின் ஆழத்தை மாமுனிகள் இங்கே காட்டுகின்றார்.


ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்




Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates