<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Wednesday, February 23, 2005

1:21 PM - யதிராஜ விம்ஸதி - முன்னுரை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீரங்க நாயிகா ஸமேத ஸ்ரீரங்கநாத பரப்ரஹ்மணே நம:


॥ श्रीयतिराजविंशतिः॥
ஸ்ரீயதிராஜ விம்Sதி :


முன்னுரை:

விஸிஷ்டாத்வைத சித்தாந்தம் என்னும் ஒப்பு உயர்வற்ற சித்தாந்தத்தை இப்பூவுலகிலே நிலைநிற்கச் செய்த ஸ்வாமி இராமானுசரைப் போற்றித் தொழ ஈனனாகிய அடியேனுக்கும் மனது விழைகிறது. ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! இது எம்பெருமானாரின் கருணையே அன்றி வேறு ஒன்றுமில்லை.

ஸ்வாமி இராமானுசரை உயரிய ஆசாரியர்கள் பலப்பல பாசுரங்கள், ஸ்லோகங்கள், க்ரந்தங்கள் வாயிலாகப் போற்றியுள்ளனர். எல்லையில்லாத கருணைக்கடலான எம்பெருமானாரின் பெருமைகளை முழுவதும் உறைக்க எவராலும் இயலுமோ? இருப்பினும், அக்கருணைக்கடலின் பெருமையை ஒரு சிறு துளியாவது பருகவேண்டும் என்ற அவா அடியேனுடைய உள்ளத்தில் நீங்காமல் குடிகொண்டது. இதுவும் அவரது கருணையே அன்றி வேறொன்றும் இல்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

உடையவரின் மேன்மையை உணர்த்த அவரின் அவதாரமாகவே தோன்றிய ஸ்வாமி மணவாள மாமுனிகளைவிட உயரியவர் வேறு ஒருவரும் உண்டோ? “யதிராஜ விம்Sதி“ என்ற பக்திரசம் மிக்க பிரபந்தத்தினால் என்னுள்ளம் உருகியது, கண்ணீர் பெருகியது என்றால் மிகையாகாது. இப்பிரபந்தத்திலே மாமுனிகள் சுய பச்சாதாபத்துடன் பல்வேறு காரணங்களைக் கூறி எம்பெருமானாரின் கருணையைப் பிரார்த்திக்கிறார். அவர் கூறியுள்ள ஒவ்வொறு காரணமும், காட்டியுள்ள ஒவ்வொரு நிலையும் அடியேனுக்காவே எழுதப்பட்டுள்ளதோ என்ற அய்யப்பாடு எழுந்தது. இதில் ஆச்சரியமொன்றும் இல்லை. எம்பெருமானாரின் கருணையைப்பெற இதைவிட வேறு நல்ல உபாயம் இருப்பதாக அடியேனுக்குத் தோன்றவில்லை. ஆகையினாலேயே இப்பிரபந்தத்தை அடியேனுடைய உள்ளத்திலே இருத்தி ஸ்வாமி இராமானுசரின் கருணையைப் பெற விழைகிறேன்.

“கற்றலின் கேட்டல் நன்று” என்பது முன்னோரின் அக்கால வாக்கு. “கற்றலின் எழுதுதல் நன்று” என்பது என் போன்றோரின் இக்கால வாக்கு. ஒரு விஷயத்தை நாம் பலமுறை படிக்கும்பொழுது மனதில் அவ்விஷயம் தெளிவாகப் பதிகிறது. அதே விஷயத்தை நாம் எழுதிப் பழகும்பொழுது தெளிவாக மட்டுமின்றி ஆழமாகவும் பதிகிறது. அத்தோடு கூடி அவ்வெழுத்து நம் தாய்மொழியாய் அமையும்பொழுது அறியவேண்டிய விஷயம் பசுமரத்தாணி போல் நம்மனதில் நீங்காமல் பதிகிறது. இக்கருத்தை ஒட்டியே என்னுடைய இந்த முயற்சி. இம்முயற்சியில் என்மனம் இராமானுசருடைய பெருமைகளையே எண்ணிக்கொண்டிருக்கும், வாக்கு இராமானுசருடைய திருநாமத்தையே ஸ்மரித்துக் கொண்டிருக்கும், கைகள் இராமானுசருடைய பெருமைகளையே எழுதிக் கொண்டிருக்கும். மனத்தாலும், வாக்காலும், செயலாலும் எம்பெருமானாரைப் பற்றியே சிந்திக்க இதைவிடச் சிறந்த வாய்ப்பு அடியேனுக்குக் கிட்டுமோ?

யதிராஜ விம்Sதிக்கு இங்கே எழுதப்பட்டுள்ள விளக்கம் அடியேனுடைய ஞானத்தினால் விளைந்ததன்று. அத்தகைய உயரிய ஞானம் அடியேனுக்கு இல்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் வளரவேண்டும் என்ற உயரிய நோக்கோடு பகவத் கைங்கர்யமாகப் பலப்பல வியாக்கியானங்களை உயர்ந்த அறிஞர்கள் பலர் அருளி வருகின்றனர். அவ்வகையிலே ஸ்ரீ.உ.வே. ஒப்பிலியப்பன் கோவில் வரதாச்சாரி சடகோபன் ஸ்வாமி அவர்களின் கைங்கர்யம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத மேன்மையையுடயது. ஸ்வாமிகள் அருளிய பலப்பல விளக்கங்களில் சிலவற்றைப் படித்து அனுபவிக்கும் பெரும் பாக்கியம் அடியேனுக்குக் கிட்டியது. அவர் யதிராஜ விம்Sதிக்கு வழங்கிய ஆங்கில விளக்கத்தை அடியொட்டியதே இந்த கருத்துக்கள். சடகோபன் ஸ்வாமிகள் வழங்கியுள்ள ஆங்கில விளக்கம் http://www.srivaishnava.org/sva.htm என்ற வலையகத்தில் கிட்டும்.

இவ்வகையில் எழுதுவதால் உலகோருக்கு யாதொருபயனும் விளையப்போவதில்லை என்பதில் அடியேனுக்கு மறுகருத்து ஏதும் இல்லை. அடியேனுடைய உள்ளத்தின் அழுக்கையகற்ற இதுவொரு சிறு முயற்சியேயாகும். இதில் ஏதேனும் பயன் இருப்பதாகத் தோன்றினால் அதன் முழு நன்மையும், மேன்மையும் ஸ்ரீசடகோபன் ஸ்வாமிகளையும், ஆசாரியன் திருவடிகளையுமே சாரும். சொல்லிலே, பொருளிலே, கருத்திலே மற்றும் வேறு யாவையிலும் உள்ள குற்றங்கள் மட்டுமே அடியேனையேச் சாரும். அடியேனுடைய இச்சிறு முயற்சியால் எம்பெருமானாரின் கருணையை வேண்டி ஆசாரியன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

அடியேன்

இராமானுச தாஸன்

சம்பத் குமார்.



Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates