<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/11037715?origin\x3dhttp://yathirajavimsati.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Thursday, February 24, 2005

1:43 PM - யதிராஜ விம்ஸதி - அவதாரிகை



श्रिशैलेस दयापात्रं धीभक्तयादि गुणार्णवम्।
यतीन्द्र प्रवणम् वन्दे रम्य जामातरं मुनिम्॥

ஸ்ரீஸைலேஸ த3யாபாத்ரம் தீ44க்த்யாதி3 கு3ணார்ணவம் |
யதீந்த்
3ர ப்ரவணம் வந்தே3 ரம்ய ஜாமாதரம் முநிம் ||



ஸ்ரீவரவர முனி என்றும், யதீந்த்ர ப்ரவணர் என்றும் போற்றித் தொழப்படுகின்ற ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்களிலே முதன்மையானவர்களில் ஒருவர். ஸ்வாமி மணவாள மாமுனிகள் கி.பி.1370ம் ஆண்டு, கிடாரம் என்னும் கிராமத்தில் திகழக்கிடந்தான் திருநாவிருடையபிரான் தாதரண்ணன், ஸ்ரீரங்கநாச்சியார் என்னும் தம்பதிகளுக்கு எம்பெருமானின் அனுக்கிரகத்தால் ஸ்வாமி இராமானுசருடைய அவதாரமாகவே அவதரித்தருளினார். அவரது பெற்றோர்கள் அவருக்கு இட்ட பெயர் அழகிய மணவாளன். திருநாவிருடையபிரான் ஒரு சிறந்த ஸ்ரீவைஷ்ணவர். அவர் தம்முடைய மகனை உரிய வயதிலே வேதத்திலும், வேத அங்கங்களிலும், திவ்ய பிரபந்தங்களிலும் தேர்ச்சி பெறச்செய்தார். அழகிய மணவாளன் உரிய வயதிலே திருமணம் புரிந்து கொண்டு கிரஹஸ்தாஸ்ரமத்தில் ஈடுபட்டார். அக்காலத்தில் அவர் ஆழ்வார் திருநகரி என்னும் திவ்யக்ஷேத்திரத்திலே எழுந்தருளியிருந்தார். திருவாய்மொழிப் பிள்ளை (கி.பி 1307 – 1410) என்னும் உயரிய ஆசாரியனிடம் சிஷ்யனாக இருந்து ரஹஸ்யார்த்தங்களையும், திவ்ய பிரபந்தங்களின் அர்த்தங்களையும் அனுபவித்து வந்தார். திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஸ்ரீஸைலேசர் என்றும் திருமலையாழ்வான் என்றும் திருநாமங்கள் உண்டு.

திருவாய்மொழியென்னும் அமுதினைப் பருகப்பருக அழகிய மணவாளரின் ஆசாரிய பக்தி பெருகிக்கொண்டே இருந்தது. எம்பெருமானாரிடமும், நம்மாழ்வாரிடமும் அவருக்கு இருந்த பக்தியின் ஆழம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதை உணர்ந்து பேரானந்தம் அடைந்த திருவாய்மொழிப் பிள்ளை, ஸ்வாமி இராமானுசருக்காகச் சிறப்பானதொரு கோவிலை அமைத்து அதற்கு அழகிய மணவாளரை ஆராதகராக நியமித்தார். இச்சமயத்திலே திருவாய்மொழிப் பிள்ளை அழகிய மணவாளரை ஸ்வாமி இராமானுசரைப் போற்றும் ஒரு ஸ்துதி இயற்றுமாறு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்திற்கு இசைந்து அழகிய மணவாளர் இயற்றியதே “யதிராஜ விம்ஸதி” என்ற இந்த அற்புதமான பிரபந்தமாகும். இப்பிரபந்தத்தின் பக்தி அனுபவத்திலே திளைத்த திருவாய்மொழிப் பிள்ளை அழகிய மணவாளருக்கு “யதீந்த்ர ப்ரவணர்” என்ற திருநாமத்தைச் சூட்டினார்.

திருவாய்மொழிப் பிள்ளை பரமபதத்திற்கு எழுந்தருளியபின் அழகிய மணவாளர் பூலோக வைகுந்தமாகிய திருவரங்கத்திற்கு எழுந்தருளியிருந்தார். அச்சமயம் ஸ்வாமி பலப்பல கிரந்தங்களை ஆராய்ந்தும், பூர்வாசார்யர்களின் வியாக்கியானங்களை அறிந்தும் காலக்ஷேபங்களை செய்த வண்ணமிருந்தார். ஸ்ரீவைஷ்ணவம் தழைத்தோங்க வேண்டும் என்ற திருவுள்ளத்துடன் ஸ்வாமி தம்முடைய உயர்ந்த எட்டு சிஷ்யர்களை அஷ்ட திக்கஜங்களாக நியமித்தார். அவர்கள், 1) வானமாமலை ஜீயர் 2) பட்டர் பிரான் ஜீயர் 3) திருவேங்கட இராமானுச ஜீயர் 4) கோயில் அண்ணன் 5) பிரதிவாதி பயங்கரம் அண்ணன் 6) எரும்பியப்பா 7) அப்பிள்ளை 8) அப்பிள்ளார் ஆகியோர் ஆவர்.

ஸ்வாமிகள் எம்பெருமானுக்கு யாதொரு தடையும், தோஷமும், குறையும் இல்லாமல் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற திருவுள்ளத்துடன் சந்நியாச்ரமத்தைக் கைக்கொண்டார். மாமுனிகளுக்கு “ப்ரேக்ஷ மந்திரம்” ஸ்ரீ ஆதிவண் சடகோப மஹாதேசிகனால் வழங்கப்பட்டது. தம்முடைய உயரிய பிரவசனங்களாலும், ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு அளித்த விளக்கங்களாலும் மாமுனிகள் “விஸத வாக் சிகாமணி” என்றும், “ஸர்வஞான ஸார்வபெளமர்” என்றும் அறிஞர்களால் போற்றித் தொழப்பட்டார்.

ஆழ்வார்களின் அருளிச்செயலுக்கு மணவாள மாமுனிகளின் கைங்கர்யத்தை கெளரவிக்கவேண்டும் என்று திருவுள்ளம் கொண்ட அரங்கநாதன், மாமுனிகளை ஒரு வருடத்திற்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழி காலக்ஷேபம் செய்தருள விண்ணப்பித்தான். அவ்வருடம் முழுவதும் திருவரங்கத்தின் அனைத்து உத்ஸவங்களும் நிறுத்தப்பட்டன. ஒருவருட காலமுடிவில் மாமுனிகள் காலக்ஷேபம் செய்துகொண்டிருந்த வேளையிலே, திவ்ய தேஜஸுடன் ஸதஸின் பின்புறத்திலிருந்து ஒரு சிறுவன் தோன்றி

श्रिशैलेस दयापात्रं धीभक्तयादि गुणार्णवम्।
यतीन्द्र प्रवणम् वन्दे रम्य जामातरं मुनिम्॥

ஸ்ரீஸைலேஸ த3யாபாத்ரம் தீ44க்த்யாதி3 கு3ணார்ணவம் |
யதீந்த்3ர ப்ரவணம் வந்தே3 ரம்ய ஜாமாதரம் முநிம் ||

என்னும் தனியனை அருளி மறைந்தான். சபையோரும், மாமுனிகளும் திகைத்திருந்த அந்த வேளையிலே அச்சிறுவன் வந்த வேகத்திலேயே மறைந்தான். பிற்பாடு, தம்முடைய அர்ச்சகர்கள் மூலமாக அரங்கநாதன் தானே அச்சிறுவனாகத் தோன்றியதாகத் திருவாக்கு மலர்ந்தருளினான். எம்பெருமானின் திரு உள்ளத்தில் இருந்து தோன்றிய இத்தனியன் மந்திரமாகவே போற்றித் தொழப்படுகிறது.

எழுபத்திமூன்று திருநக்ஷத்திரங்கள் இப்பூவுலகிலே அவதரித்திருந்த ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம் வாழ்நாளிலே 19 கிரந்தங்களை அருளியுள்ளார். அவையாவன : வியாக்கியான கிரந்தங்கள் (ஸ்ரீவசனபூஷணம், முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஆசார்யஹ்ருதயம், ஞானஸாரம், ப்ரமேயஸாரம், பெரியார்வார் திருமொழி, இராமானுச நூற்றந்தாதி)

ப்ரமாணத் திரட்டு (ஈடு, ஸ்ரீவசணபூஷணம், தத்வத்ரயம்), கிரந்தங்கள் (உபதேசரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாற்று, திருவாராதன க்ரமம், யதிராஜ விம்Sதி, தேவராஜ மங்களம், காஞ்சி தேவப்பெருமாள் ஸ்தோத்ரம், ஆர்த்திப்ரபந்தம்).

திருவரங்கனின் பேரருளால் தாம் பெற்ற பேற்றையெல்லாம் தம்முடைய ஆர்த்திப் பிரபந்ததிலே ஸ்வாமி மணவாள மாமுனிகள் அற்புதமாக அருளிச்செய்கிறார்.

தென்னரங்கர் சீரருளுக்கிலக்காகப்பெற்றோம்
திருவரங்கம்திருப்பதியே யிருப்பாகப்பெற்றோம்
மன்னியசீர்மாறன்கலை யுணவாகப்பெற்றோம்
மதுரகவிசொற்படியே நிலையாகப்பெற்றோம்
முன்னவராம்நங்குரவர் மொழிகளுள்ளப்பெற்றோம்
முழுதும்நமக்கவை பொழுதுபோக்கப்பெற்றோம்
பின்னையொன்றுதனில் நெஞ்சுபேராமல்பெற்றோம்
பிறர்மினுக்கம்பொறாமையில்லாப்பெருமையும் பெற்றோம்


ஜீயர் திருவடிகளே சரணம்


No comment

Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates